ஸ்டாலின்.

திமுகவின் அடுத்த நம்பிக்கை. இளைஞர்கள் மத்தியில் பரவலான ஆதரவு பெற்றவர். நிர்வாகத்தில் சிறந்தவர். அழகிரி, கனிமொழி, தயாநிதி போலில்லாமல் கடினமான உழைப்பால் கட்சியில் உயர்ந்தவர்.அடுத்த தலைமை. எல்லோரையும் போல எனக்கும் இப்படிப்பட்ட நம்பிக்கைகள் இருந்தன, சில காலம் முன்பு வரை. கடந்த ஆட்சி திமுக மீது பெரும் கோவத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியெதென்றால், ஏனோ சமீபத்திய நடவடிக்கைகள் ஸ்டாலின் மீதான நம்பிக்கையை சுக்கு நூறாக்குக்கின்றன.
இதில் ஸ்டாலினின் நேர்மையை விவாதிக்க விரும்பவில்லை. ஒரு தலைவனுக்குண்டான தகுதிகள் பற்றியே பேச விரும்புகிறேன். ஒரு கட்சிக்கு தலைவனாகவோ, இந்தியா போன்ற ஒரு நாட்டில் மாநில முதல்வராகாவோ விரும்புகிறவருக்கு வாய்ப்புகளை உருவாக்கவும், கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ளவும் தெரிய வேண்டும். அண்ணா மறைவுக்கு பிறகு நடந்த குழப்பங்களின் இடையில் சாமர்த்தியமாக தலைவர் ஆன கலைஞரின் புத்திசாலித்தனம் ஸ்டாலினிடம் வெளிப்பட்ட நிகழ்வுகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. தயாநிதி & கலாநிதி கட்சியை கைப்பற்ற முயன்றதில் 1% கூட ஸ்டாலின் நினைக்கவில்லை. எல்லாம் தானாக நடக்கும் என இருப்பவன் தலைவன் இல்லை.
அண்டை மாநிலமான ஆந்திராவை எடுத்துக் கொள்ளலாம். சந்திரபாபு நாயுடு எப்படி கட்சியை கைப்பற்றினார்?அதன்பின் அமைந்த அவரது தலைமையிலான 5 ஆண்டு ஆட்சி மிக முக்கியமான ஒன்றாக ஆகவில்லையா? 2011 தேர்தலுக்கு முன்பு எப்போது அழகிரியும், கனிமொழியும் போட்டிக்கு வந்தார்கள்? 40 ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்து வரும் ஸ்டாலின் அதை தடுக்க ஏதும் யூகம் அமைத்தாரா அல்லது அவர் தலைவராகத்தான் ஏதும் திட்டம் தீட்டினாரா? எல்லாம் கனிந்து தானாக தன் கையில் வருமென காத்திருப்பவரை எப்படி நம்புவது?
முல்லை பெரியார் பிரச்சினையை எடுத்துக் கொள்ளலாம். உணர்வுப்பூர்வமாக போராடுவது இருக்கட்டும். திமுக அதற்காக போராடிய முறைகள் நகைப்புக்கு உரியதாகத்தான் அமைந்தன. தன்னிச்சையாக எழுந்த மக்கள் புரட்சி பல்லாயிரக்கணக்கானோரை எல்லையில் சேர்த்தது. களம் சென்று அதை நெறிப்படுத்தாமல் மனித சங்கிலி சென்னையிலாம். இறுதிவரை இந்த விஷயத்தில ஸ்டாலினின் கருத்து இதுவென எங்கேயும் மக்கள் மனம் வரை செல்லுமாறு அவர் பதிவும் செய்யவில்லை. சாதகமாகவோ,பாதகமாகவோ கலைஞர் பெயரின்றி தினப்பத்திரிக்கை எதுவும் வருவதில்லை. தன்னைப் பற்றி செய்திகள் வந்தவண்ணம் இருக்க வேண்டுமென்பதில் தந்தை காட்டிய அக்கறை மகனுக்கு மறந்தே போனது ஆச்சரியம்தான்.
இளைஞர்கள் திமுகவசம் என்பார்கள். காலத்திற்கேற்ப இளைஞர்களை கவர்ந்திழுக்கும் கொள்கைகளும், போராட்ட முறைகளும் கையாண்ட திமுக செத்து போயிற்று. இணையம் பக்கம் திமுகவின் செயல்பாடுகள் ஆரம்பிக்கவே இல்லை. லக்கி, அபிஅப்பா, அப்துல்லா போன்றோரின் நடவடிக்கைகளை திமுகவின் நடவடிக்கைகளாக என்னால் பார்க்க இயலவில்லை. மேயராக இருந்த போது இளைஞர்கள் மத்தியில் இருந்த நம்பிக்கை, அவர் உள்துறை அமைச்சராக இருந்த போது கிடைக்காமல் போனதுதான் நிதர்சனம்.
“கண்ணியமான அரசியல் செய்கிறார். இதுவரை எந்த ஊழல் புகாரிலும் சிக்கவில்லை.” இது போன்ற விஷயங்கள் நிச்சயம் அவர் மீதான மதிப்பை கூட்டுக்கின்றன. ஆனால் ஒரு தலைவனுக்கு தேவையான சாதூர்யங்கள் இவரிடம் இருந்து வெளிப்பட்டதுண்டா என்பதே கேள்வி. இவரை போன்றவர்கள் ஒரு நிறுவனத்தில் மிக முக்கிய பொறுப்பில், CEO போன்று, இருக்கலாம். ஆனால் ஒரு Entrepreneur ஆக இதைத் தாண்டி ஏதோ ஒன்று தேவைப்படுகின்றதே. தலைவன் என்பவன் சம்பளத்திற்கு வேலை செய்பவன் அல்ல, சம்பளம் தர வேண்டியவன்.
காங்கிரஸ் உடனான உறவில் பல சிக்கல்கள் இருந்தது என்னவோ உண்மைதான். அதற்காக ஒவ்வொரு வாய்தாவின் போதும் வீராவேசமாக பொதுக்குழுவை கூட்டுவதும், போண்டா சாப்பிட்டப்பின் உறவு சிக்கலின்றி தொடர்கிறது என்றும் அறிக்கை விட்டதெல்லாம் கைப்புள்ள காமெடி. 63 சீட்டுகள் பகிர்ந்ததும், அதன் பின்னரும் இளங்கோவன் போன்றோர் கர்ஜித்ததும், அதை ஸ்டாலின் கூட அமைதியாக பார்த்ததும் திமுகைவை புலிகேசி அளவிற்கு மக்கள் எண்ண வழி செய்துவிட்டன. இனி புரட்சிப்படை அமைத்தாலும் மீண்டு வருவது சிரமம்.
இனியும் கலைஞரின் வார்த்தைக்காக தாமதிக்காமல் கட்சியை கைப்பற்ற முயலாவிட்டால் ஸ்டாலில் எப்போதும் எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெறவே முடியாது. அது கூட பிரச்சினையில்லை. விஜய்காந்த அந்த பக்கத்தை நிரப்பலாம். சொல்லப் போனால், இந்தப் பதிவு எழுத வேண்டுமென தோன்றியதன் மூலகாரணம் ஸ்டாலின் அல்ல. அச்சத்தை விளைவிக்கும் கேப்டனின் வளர்ச்சி.



