Sky jump will you come என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் தம்பு, படத்தில் குத்துப் பாடலே இல்லை என்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் இயக்குனருடன் மனக்கசப்பில் இருக்கிறார். ஒருவழியாய் அவரை சம்மதிக்க வைத்து ஒரு குத்துப் பாடலுக்கு பர்மிஷன் வாங்கி தனது குத்துப்படையுடன் டிஸ்கஷன் நடத்துகிறார். இசையமைப்பாளர் சிவனும், பாடலாசிரியர் பூவரசுவும், கிரியேட்டிவ் ஹெட் காஃபி.அஞ்சும் வந்துவிட வேகமாக விரலால், மன்னிக்க, காலால் நடந்து வருகிறார் தம்பு
சிவன்: சிச்சுவேஷன் சொல்லுங்க. போட்டுடலாம்.
பூவரசு: தமிழ் சினிமாவுக்கே புதுசுங்க. ஹீரோ வில்லன்களையெல்லாம் ஒன்னா தீர்த்துக் கட்டப் போறாரு. அதான் க்ளைமேக்ஸ். அதுக்கு முன்னாடி தன் காதலிய பார்க்கறாரு.அப்ப ஒரு பாட்டு. கடைசி நேரங்கறதால நல்லா ஸ்பீடா இருக்கனும்.
காபி.அஞ்சு: (எகிறுகிறார்)
யோவ் நான் தான் கிரியேட்டிவ் ஹெட்டு
பாட்டு எழுத மட்டும்தான் உனக்கு துட்டு
நான் போட்ட எல்லாப் பாட்டும் ஹிட்டு
இந்த பாட்டுல போடறோம் எட்டு செட்டு
(வேறு வழியின்றி வாய் மூடி அமர்கிறார் பூவரசு)
தம்பு: உலகத்திலே சின்ன வயசுல டைரக்டர் ஆனவன் நான் தான். நான் சொல்றேன் சிச்சுவேஷன். கதைப்படி ஹீரோயின நான் பிரிஞ்சிடறேன். அந்த சோகத்துல தண்ணியடிச்சிட்டு பாடறேன். குத்துப்பாட்டாவும் இருக்கனும். காதலின் வலியும் இருக்கனும்.
சிவன்: oops. இப்ப யாருக்கு நான் ட்யூன் போடனும்? தம்பு நீங்க சொன்ன மாதிரியே போடலாம். லிரிக் ரைட்டர் லீடு கொடுத்தா நல்லாயிருக்கும்
பூவரசு: இதோ ஒரு நிமிஷம் சார். (யோசிக்கிறார்)
கா.அ. : சொன்னவுடனே வரணும் பாட்டு
அதுக்கு நான் ஒரு எடுத்துக்காட்டு
இதாப்பா சிவன் புடிச்சுக்கோ..
டண் டணக்கா நீயும் அடிச்சுக்கோ
அட மயிலாப்பூர் ஃபிகரே உனக்கில்லை நிகரே
சிங்கமென வாழ்ந்தவன் நானே
என்னை அசிங்கமாக ஆக்கிட்டு போனே
தம்பு : மனதுக்குள்(இந்த பொன்னான மனசே ட்யூன விடவே மாட்டாரா?)
பூவரசு: வந்துடுச்சு சார். (எல்லோரும் ஒரு மாதிரி பார்க்க, ஆரம்பிக்கிறார்)
சென்னையில ஓடுதடி கூவம்
என் மேல உனக்கென்ன கோவம்
நீ இல்லாம நான் வாழ்ந்தா பாவம்
ரெண்டு பேரும் ஒன்னா செத்து போவோம்
சிவன்: வாவ். சூப்பர்ப் ஃபீலிங். என்ன தம்பு. மெட்டும் தானா வருது.(மூக்கால் பாடிக் காட்டுகிறார்)
தம்பு: யா. எக்ஸலண்ட். அடுத்த வரி என்ன சார்?
பூவரசு: (டஸ் புஸ் சத்தம் இல்லாம, வாயசைவதே தெரியாமல் பாடுகிறார்)
புடிக்கல புடிக்கல வாழப் புடிக்கல
முடிக்கல முடிக்கல ஃபுல்ல முடிக்கல
தம்பு: அப்படியே பல்லவியோட லாஸ்ட் லைன் சும்மா கும்முனு சொல்லுங்க. வார்த்தைகள் பவர்புல்லா, தமிழ் சினிமாவுக்கு புதுசா இருக்கனும்
பூவரசு: சர்ர்க் சர்ர்க் கலந்தடிச்சா காக்டெயில்
டர்ர்க் புர்ர்க் காதலிலே நான் ஃபெயில்.
சிவன்: (சிலிர்த்துக் கொண்டு பாடிக் காட்டுகிறார் பல்லவியை.)
சென்னையில ஓடுதடி கூவம்
என் மேல உனக்கென்ன கோவம்
நீ இல்லாம நான் வாழ்ந்தா பாவம்
ரெண்டு பேரும் ஒன்னா செத்து போவோம்
புடிக்கல புடிக்கல வாழப் புடிக்கல
முடிக்கல முடிக்கல ஃபுல்ல முடிக்கல
சர்ர்க் சர்ர்க் கலந்தடிச்சா காக்டெயில்
டர்ர்க் கர்ர்க் காதலிலே நான் ஃபெயில்.
(கையாலும் வாயாலும் டண்டணக்க தாளம் போடுகிறார் கா.அ. வலிப்பு வந்ததைப் போல ஆடுகிறார் தம்பு)
பூவரசு: அப்படியே சரணமும் சொல்றேன் கேளுங்க
பிஞ்சுன்னு நினைச்சுட்டாங்க என்ன
நெஞ்சுக்குள்ள வச்சுப்புட்டேன் உன்ன
மஞ்சுன்னு உன் பேர நீ சொன்ன
ம்ம்.. கடைசி வரில வைக்கிறோம் சார் ல்வ் ஃபீலிங்க
நஞ்ச வச்சு இப்ப நீயே ஏன் கொன்ன.எப்படி சார்?
தம்பு: பின்றீங்க பாஸ். அப்படியே நம்ம மாஸ் காட்டலாமா?
பூவரசு: அது இல்லாமலா?
என் பின்னால ஒரு கோடி பேரு
தமிழ்நாட்டில் எல்லாமே என் ஊரு
உன் கையால சாப்பிடனும் சோறு
என்னை வெல்ல உனையன்றி யாரு?
ரெண்டு மனசுக்குள்ள நடக்குது வாரு
இப்ப என் கையில மட்டும் பாரு பீரு
தம்பு: கொன்னுட்டிங்க சார்
பூவரசு: பினிஷிங் கேளுங்க
சர்ர்க் சர்ர்க கலந்தடிச்சா காக்டெயில்
டர்ர்க் கர்ர்க் காதலிலே நான் ஃபெயில்.
(ஏரியா கலகலப்பான நேரம், மோசதேவன் அங்கே வர, பாடலைப் பாடிக் காட்டுகிறார்கள். அலறியடித்துக் கொண்டு ஸ்க்ரிப்டோடு கோர்யா வீட்டுக்கு ஓடுகிறார்.அங்கே அவர் மீசையை முறுக்கி, ”சாரி பாஸ். நான் பாலா அண்ணனுக்கே டேட்ஸ் இல்லைன்னு சொல்லிட்டேன். இப்ப என் ரூட்டே வேற” என்கிறார்)