வழக்கமாய் எல்லோரும் நிறைகளை முதலில் சொல்லிவிட்டு குறைகளை சொல்வார்கள். நாம் குறையை சொல்லி ஆரம்பிப்போம். எனக்கு அதுதான் தெரியுமாமே!!
“சத்தியமா இது வித்தியாசமான படம் அல்ல”
என்னய்யா நினைச்சுக்கிறீங்க? இதைப் போல் ஒரு படம் தமிழில் வந்திருக்கா? எல்லாத் தமிழ்ப்படத்தை வைச்சுதான் இந்த தமிழ்ப்படம் எடுக்கப்பட்டாலும் இது புதுசுதான். இது எல்லாம் வித்தியாசம் இல்லைன்னு நினைக்கிறதாலதான் “போறவங்க வர்றவங்க” எல்லாம் உலகப் படமா எடுக்கிறாங்க.
கதை, கந்தாயம் எல்லாம் இந்நேரம் தெரிந்துக் கொண்டிருப்பீர்கள். வசனம், வெங்காயம் எல்லாம் படம் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள். அப்ப நான் என்னதான் எழுதப் போறேன்? என் கொண்டாட்ட மனநிலையை. வீட்டில் ஒரு திருமணம் நடந்தால் எப்படி ஃபீல் பண்ணுவோமா கிட்டததட்ட அப்படியொரு சந்தோஷத்தை இரண்டு மணி நேரத்தில் தந்திருக்கிறார்கள். காலத்துக்கும் மறக்க மாட்டோம் பாஸ்.(நீங்க ப்பாஸ் பண்ணிட்டிங்க. அதான் பாஸ்..) இனி குறைகளை பார்ப்போம். குறைகளை மட்டும் பார்ப்போம்.
ஒவ்வொரு காமெடியும் புன்னகையெல்லாம் இல்லை, ஹாஹாவென விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. மனசாட்சி வேண்டாம்? ஒரு மனுஷன் இவ்வளவுதான் சிரிக்க முடியும் என்று ஒரு கணக்கு வேண்டாமா என வடிவேலு பாணியில் கேட்க வைக்கிறார்கள். பார்வையாளர்களை வதைக்கும் தல, தளபதிகளை கிண்டலடிக்கிறேன் என்று நீங்களும்தான் வதைக்கிறீர்கள். திரும்பும் வழியில் சிக்னலில் தனியே சிரித்துக் கொண்டிருந்த என்னைக் கண்டு ஒதுங்கியது ஒரு ஃபிகர். படத்தின் முதல் குறை. அளவில்லா காமெடி. ஃபிகர் போனதால் என்னைப் பொறுத்த வரை எக்ஸ்ட்ரா லார்ஜ் குறைதான்.
இடைவிடாமல் சிரித்துக் கொண்ட எனக்கு பெரும் அதிர்ச்சி தந்தார்கள். என்னால் அந்தக் காட்சியை இப்போது வரை ஜீரணிக்க முடியவில்லை. எடிட்டருக்கு நிச்சயம் கல்மனசுதான். இல்லையெனில் இப்படி செய்ய முடியாது. இடைவேளையாம். தேவையா அந்த கருமம்? இது குறையில்லையா?
இந்த மாதிரி படத்தில் தான் லாஜிக் பார்க்க வேண்டுமாமே!! பெரியவங்க சொன்னாங்க. டூயட் பாட வெளிநாடு சென்று திரும்பும் நாயகனிடம் எங்கடா ரெண்டு நாளா காணோம்ன்னு பாட்டி கேட்க, உண்மையை உரக்க சொல்கிறார். ஊர் எல்லையில் இருந்த அம்மன் சிலை திடிரென எழுந்து ஆட..ஆஹா லாஜிக் மிஸ் ஆகுதே என்று பார்த்தால், அதற்கும் ஒரு காரணம். நம்பும்படி. வில்லனுக்கு D என பேர் எப்படி வைக்கலாம்? டா என்றுதானே வைக்கனும்? அதற்கும் க்ளைமேக்ஸில் சரியான பதில். சின்ன சின்ன லாஜிக் கூட மிஸ் ஆகவில்லை. அப்புறம் எப்படித்தான் நாங்க பதிவெழுதுவது? அடுத்த குறை.
2007ல் டாடாவில் வேலை செய்து கொண்டிருந்தேன். சென்னை, நந்தனத்தில் தான் அலுவலகம். அப்போதுதான் சென்னை-28 கலக்கிக் கொண்டிருந்த நேரம். ஒரு நாள் வேகமாய் வெளிவந்து ரோட்டை கடந்தவன், ஒருவரைப் பார்த்து நம்ம உலகநாயகன் நாயகியை பார்த்து பேக் அடிப்பது போல் அடித்தேன். என்னை முந்திக் கொண்டு அவர் ஹாய் சொன்னார். அவர் ஷிவா. சில நிமிடங்கள் பேசினோம். அதே மாதிரிதான் படம் முழுக்க பேசியிருக்கிறார். சின்ன வித்தியாசம் கூட இல்லை. நடிப்பு என்றால் இப்படியா? சுத்தமாக பிடிக்கவில்லை ஷிவா. வசனம் முடியும்போது கண்கள் மூடி தலை சாய்க்கும் மேனரிசம் சகிக்கலை. அதே போல் “செம” என்ற வார்த்தையின் மாடுலேஷன். சுத்தமாக பிடிக்கவில்லை.ஷிவா. இன்னொரு குறை.
இசை. ஏற்கனவே பாடல்கள் பற்றி எழுதிவிட்டேன். இருந்தாலும். ஹரிஹரனுக்கு தமிழ் தெரியுமா என்று தெரியவில்லை. எப்படித்தான் லாலாக்கு..லாலாக்கு டோல் டப்பிமாவை சிரிக்காமல் பாட முடிந்தது? அதற்கு ஷிவாவின் ரியாக்ஷன். ங்கொய்யால. அலறுகிறது தியேட்டர். அழகான ஒரு மெலடியை இதைவிட அதிகமாக டேமேஜ் செய்ய முடியாது. இந்தப் பாவத்திற்கு எமதர்மன் உங்களுக்கு “சினிமாப்பட்டி சிங்கம் வாடா. சிரிசிரிக்க வைச்சு போடா” என்ற தண்டனைதான் தரப்போகிறார். அதே போல் ஒரு சூறாவளி கிளம்பியதே பாடல். காஃபி ஆறினால் என்ன? வில்லனுக்குத்தானே? அதற்காக பாட்டை ரெண்டே நிமிடத்தில் முடிப்பதா? மூளை இல்ல? மோசக்காரங்களா. குறையோ குறை இது.
வசனம். கெட்ட வார்த்தைதான் வருது.எனக்கு. வசனகர்த்தாவுக்கு இல்ல. அந்த ஷிவாவைப் பார்த்தாலே சிரிப்பு வருது. இதுல வசனத்த வேற இப்படி எழுதி கொடுத்தா? பணத்தை விட மனுஷங்கதான் முக்கியம் என்று சொல்வதற்கு முகேஷை விட சரியா உதாரணம் தர முடியுமா? அதே போல் மணிரத்னம் டைப் வசனம். பாஸ்.உண்மைய சொல்லுங்க. படம் முடிந்த பின் வரும் அந்த வாக்கிங் மேட்டர், நீங்க எழுதி தந்ததுதானே? செம மொக்கை. படத்தின் இன்னொரு பெரிய குறை.
இப்படி அடுக்கிக் கொண்டே போகிறேனே. நல்ல விஷயமே இல்லையா என்று கேட்கறீங்களா? படத்தின் கடைசி சில சீன்கள் நல்லா இருக்கு. இவ்ளோ மொக்கையான படத்தை 2 மணி நேரத்தில் முடிச்சது நல்லா இருக்கு. தலைப்பு பூந்தி என வைத்ததற்கு காரணம் உண்டு. அய்யய்யோ அது இல்லைங்க. உதிரியாக காமெடி சூப்பர் என்றாலும் முழுப்படமாக இன்னும் பெட்டராக இருந்திருக்கலாம். இருந்திருந்தால் அமுதனின் லட்டு என்று தலைப்பு வைத்திருப்பேன்.
ஒட்டு மொத்த யூனிட்டுக்கும் ஒரு பெரிய நன்றி. நீங்கள் சேர்த்திருக்கும் புண்ணியத்தை இனி தொடர்ந்து வரப் போகும் ஸ்பூஃப் படங்களும், கதையே கேட்காமல் ஷிவா நடிக்கப் போகும் படங்களோ வந்து தீர்த்துக் கட்டட்டும். நீங்கள் தீர்க்கமாக இதே போல் ஆராவாரமான இன்னொரு படத்திற்கு தயாராகுங்கள்.
தமிழ்ப்படம் : தங்கமான படம்.




